Sunday, 26 December 2010

இனி வேண்டாம் இப்படி ஒருநாள்...இப்போ ஆறு வருஷத்துக்கு முன்னால இதே மாதிரி ஒருநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கும் போது, "அடேய் இன்னுமா தூக்கம் எழும்புடா அப்பிடீன்னு அம்மாட சத்தம் கேட்டு இனியும் தூங்கினா நல்லதில்லன்னு (விடிய காலைல 9.00 மணிக்கே) எழும்பிட்டேன். 10.30.க்கு கிளாஸ் இருக்கு.வெலிகமையில இருந்து காலிக்குப் போகனும்.அப்போ க.பொ.த.உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். (லீவு நாளக்கி கூட ஒழுங்கா தூங்க முடியலங்க....)அப்பிடியே குளியலறைக்குப் போனேன். அப்போ நாலுபேரு சேர்ந்துகிட்டு சண்டை பிடிக்கிறது போல ஒரே சத்தமா இருந்துச்சி. அட காலங்காத்தால சண்டையா? சத்தம் குறைந்த பாடில்ல. அப்பிடியே வெளியில கொஞ்சம் எட்டிப் பார்ப்போம் என்று பார்த்தேன். அப்பதான் தெரிந்தது நாலுபேரு இல்ல நாற்பது பேருக்கும் மேல அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் நிறைய பேர் சாரி சாரியாக வந்து கொண்டே இருந்தாங்க. என்னங்க பிரச்சினை என்று பக்கத்துல ஓடி வந்தவர நிறுத்திக்கேட்டேன். அப்போ யாருமே இருக்காதீங்க ஓடுங்க...கடல் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்குது..அப்பிடீன்னு சொல்லிட்டு அவரும் அழுது கொண்டே ஓடிவிட்டாரு..

எங்க வீட்டுப்பக்கம் கொஞ்சம் உயரமான பகுதி என்பதால அந்தப்பக்கமா தான் எல்லோரும் வந்து கொண்டிருந்தாங்க. அப்போ எனக்கு அவ்வளவு விபரீதமா தெரியல. என்னன்னு பார்த்துடுவோம் அப்பிடீன்ன எண்ணத்துல நானும் சந்திப்பக்கமா போனேன். அப்பாடா... என்னோட இடுப்பு அளவுக்கு கறுப்பு நிறத்தில் கடல்நீர் நிறைந்து இருந்துது. கடைகள் வீடுகள் எல்லாமே அப்பிடியே நீரில மூழ்கி இருந்துது. எல்லோரும் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வந்து கொண்டிருந்த காட்சி என் மனசுல இன்னுமே அழியாத காட்சிகளாக இருக்கு.

எனக்கோ பயம் வேற தொற்றிக்கொண்டது.அப்போ நான் கண்ட காட்சி என்னால மறக்கவே முடியாதுங்க.என் இடுப்பளவுக்கு நீர் இருக்கு. நீருக்குள்ள என்னமோ சிக்கிக் கொண்டு கால்களுக்கருகில் இருப்பதை உணர்ந்த நான் என்னன்னு தூக்கிப்பார்த்தேன்...என்னால முடியலங்க... ஒன்றுமே அறியாத 3வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை அது. அப்பாடா... இவ்வளவு பெரிய விபரீதம் ஒன்னு நடந்திருக்குதா.... அப்பதான் நானும் தெரிந்து கொண்டேன். உடனே அந்தக்குழந்தையை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துட்டுப் போனாங்க. அந்தக்குழந்தைக்கு என்ன நடந்ததோ பாவம்.

அப்போ தான் எனக்கு விபரீதம் தெரிந்தது. இது வெலிகமையை மட்டுமல்ல முழு உலகையுமே திசைதிருப்பச் செய்த சுனாமிப் பேரலை என்று. அன்றைய நாள் என்னால மட்டுமல்ல யாராலயுமே மறக்க முடியாத நாள் தான் அது.அங்காங்கே மக்கள் என்ன செய்வதென்று அறியாது தாய் பிள்ளையையும் பிள்ளை தாயயும் அழுதுபுலம்பிகொண்டு தேடிய காட்சிகளை எப்படிதான் மறக்க முடியும். எங்கு பார்த்தாலும் அழுகுரல் தான் கேட்டது. இந்த நாள ஞாபகப்படுத்தும் போது இப்பகூட என்காதுல அந்த அழுகுரல் சத்தங்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கு. ஆங்காங்கே மனித உடல்கள் உயிரற்று சிதரறிக்கிடந்த காட்சிகள் இன்னும் மனத்திரைல ஓடிக்கொண்டுதான் இருக்கு. அன்றைய நாள் முழு ஊருமே வெறும் இருட்டாகதான் கிடந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் எவ்வளவு சந்தோசமாக பொழுதைக் கழிக்க வேண்டிய நாள். இவ்வாறு குடும்பங்கள, சொந்தங்கள, வீடுவாசல்கள, நிம்மதி சந்தோசத்த இழந்து தனிமையில அடுத்து என்ன செய்வதென்று அறியாம தவித்த அன்றைய நாள இப்ப இந்த நிமிடம் நினைச்சாகூட மனசுக்கு கவலயாத்தான் இருக்கு. என்றாலும் சொந்தங்கள குடும்பங்கள இழந்து என்ன செய்றதுன்னு தெரியாம தவித்துக்கொண்டு இருந்த நேரத்திலயும், தன்னைப்போன்று தான் மற்றவருடைய நிலையும் என்று இன, மதம் கடந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்ட காட்சிகள் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துது. இப்போ 6 வருஷம் ஆச்சே என்று யாரலையும் மறக்க முடியாது. இந்த நேரத்துல உங்களோட சேர்ந்து நானும் கொஞ்சம் ஞாபகப்ப்டுத்திக்கொண்டேன்.

இப்படியான ஒருநாள் இனி வரக்கூடாதுன்னு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக!!!....