Friday, 7 January 2011

எண்ணப்படாத பக்கங்களும் எழுதப்படாத வரிகளும்....மாத்தறை மாவட்டத்தில இயற்கை அழகுடன் கூடிய அழகான ஊரு வெலிகமை. பல மதத்தவர்களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து வாழக்கூடிய ஊருதாங்க எனது சொந்த ஊர். இந்த அழகான ஊரிலே இன்னொரு ஜீவனாக நானும் பிறந்து எல்லோரும் போல சுயமாக இயற்கையை சுவாசிக்க ஆரம்பித்த நாள் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதி. நான் நெனக்கிறேன் இந்தக் காலகட்டமானது நாட்டில நாலாபக்கத்துலயும் சற்று வழமைக்கு மாற்றமாக குழப்பமான சூழலாக மாறியிருந்த நாட்கள். (நான் வளர்ந்த பின்னர் தெரிந்து கொண்டது). எவ்வாறாயினும் அந்த நாட்கள் எங்கட குடும்பத்தில மேலும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அதிகரித்த நாட்கள் என்றுதான் கூறனும். எனது தாய்க்கும் தந்தைக்கும் அக்காவுக்கப்புறமா பிறந்த முதாலவது ஆண் பிள்ளை தான் நான். எனக்கப்புறமா ஒரு தங்கச்சி தம்பின்னு நாங்க நாலு பேரு. அதேபோல அன்புக்கு அம்மா அடக்குறத்துக்கு அப்பான்னு சந்தோசமான குடும்பம். என்னோட வாழ்க்கைல நான் தாண்டி வந்த தடைகளையும் நான் பெற்ற வெற்றிகளையும் இந்த சந்தோசமான பொழுதில் (24 வயதை எட்டிய இந்நாளில்) ஒங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசப்பட்டதால இந்தப் பதிவில் மீண்டும் உங்கள சந்திக்க வந்தேன்.வாழ்க்கைல கடந்து வந்த ஞாபகச்சுவடுகளை மீண்டுமொரு முறை மீட்டிப்பாக்கும் போது அதுவும் சந்தோசமான இந்த நிமிடத்தில் மீட்டிப்பார்த்து என் அன்புக்குறிய ஒங்களோடு பகிர்ந்து கொள்றத நெனைக்கும் போது இன்னும் மனசுக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் இருக்குது...சில சமயங்களில அம்மா கூட கேட்டுட்டு, "அடேய் அதேமாதிரியே பேசுறாய்டா மறுபடியும் பேசிக்காட்டேன்டா' அப்பிடின்னு சொல்லுவாங்க.எனது கடந்தகால வாழ்க்கை பல சவால்கள எதிர்கொண்டிருந்தாலும் தனியா நின்று சவால்கள முறியடித்து பல வெற்றிகளையும் கண்டிருக்கேன். எண்ட பாடசாலைக்கல்விய ஆரம்பம் முதல் க.பொ.த. உயர்தரம் வரைல வெலிகம அறபா தேசிய பாடசாலைலதான் கற்றேன். பாடசாலைக் காலம்னா அது யாராலும் மறக்க முடியாத காலம். அது போல தான் எனக்கும் இப்ப கூட பல ஞாபகங்கள அடிக்கடி எண்ட மனதையும் தொட்டுச்செல்லும். பாடசாலைக்காலத்துல என்கூட நிறய நண்பர்கள் இருந்தாங்க..இப்பகூட இருக்காங்க. நான் எல்லோரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவேன். என்னை எல்லோர்க்கும் ரொம்ப பிடிக்கும். பாடசாலைக்காலத்திலிருந்தே கலைத்துறைல எனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. என்றாலும் எனக்கு போதுமான சந்தர்ப்பங்கள் கிடைக்கல. எவ்வாறாயினும் சாதிக்க வேணும்னு எனக்குள்ளே புலம்பிக் கொண்டிருப்பேன்.வீட்டில இருக்குற நேரத்தில அதிகமாக வானொலி கேட்பேன்.அப்போ தனியார் வானொலிகளின் ஆதிக்கம்குறைவாக இருந்துது. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை மிகவும் பிரபல்யமாக இருந்தது. அப்போ எனக்குப் பிடித்த அறிவிப்பாளர்களாக B H அப்துல் ஹமீட் அண்ணா, K ஜெயகிருஷ்ணா அண்ணா, A.R.M ஜிப்ரி அண்ணா....இப்படி சொல்லிட்டே போகலாம். இவங்கட நிகழ்ச்சிய கேட்டேன்னா, நிகழ்ச்சி முடிந்ததுக்குப் பிறகு நான் தனியா அவங்களப் போலவே செய்து பார்ப்பேன். அவர்களுடய குரல்ல பேசியும் பார்ப்பேன்.சில சமயங்களில அம்மா கூட கேட்டுட்டு, "அடேய் அதேமாதிரியே பேசுறாய்டா மறுபடியும் பேசிக்காட்டேன்டா' அப்பிடின்னு சொல்லுவாங்க. அந்த சந்தோசத்துல மறுபடியும் செய்வேன்.எனக்கு A.R. M ஜிப்ரி அண்ணாட குரல்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்போ அவர்ட நிகழ்ச்சில, எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சின்னா அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம் நிகழ்ச்சி தான். வெள்ளிக்கிழமைகளில தவறாம இந்நிகழ்ச்சிய கேட்பேன். அவரோட சேர்ந்து ராஜேஸ்வரி சன்முகம் அம்மாஅவங்களும் குரல் கொடுப்பாங்க. அப்படியே நானும் ஒரு அறிவிப்பாளனாகனும்னு எனக்குள்ளும் ஆசைய வளர்த்துக்கிட்டே வந்தேன். ஆனால் எப்படி இந்த நிலைக்கு வர்ரதுன்னு தெரியல...இப்படி இருக்கும் போதுதான் 2005ம் ஆண்டு க.பொ.த.உயர்தரம் முடித்திவிட்டு மேற்படிப்ப தொடரும் நோக்கோடு கொழும்புக்கு வந்தேன். அப்போது இலங்கை தொழில்நுட்பக்கல்லூரியில கணக்கீட்ட்டுத்துறையில் இரண்டு வருட முழுநேர பாடநெறியை முடித்துக்கொண்டு, மேலும் கல்வியைத்தொடரும் நோக்கில தெஹிவளையிலுள்ள உயர் தொழில்நுட்பக்கல்லூரியிலும் இணைந்து கொண்டேன். இந்த காலகட்டத்தில் தான் எனது வாழ்க்கைல பல படிப்பினைகளையும் அனுபவங்களயும் கற்றுக்கொண்டேன். இவ்வாறாக எனது வாழ்க்கை வட்டம் சுற்றிக்கொண்டிருக்கும் போது இதே துறையில் ஒரு வேலையையும் தேடிக்கொண்டேன் என்ற மனநிம்மதி இருந்தாலும், திருப்தி இருக்கல்ல...ஏன்னு கேகுறீங்களா??.. சின்ன வயசிலிருந்தே நான் எனக்குள்ள வளர்த்த ஆசை நான் ஒரு அறிவிப்பாளன் ஆகனும்னு தான்.இப்போ புரிதா??இவ்வாறாக இருக்கும் போதுதான் எனக்கு ஒரு சர்வதேச இணைய வானொலி நிறுவனம் ஒன்றின் அறிமுகம் கிடத்தது.எனக்கும் அந்த வானொலி நிறுவனத்துடன் இணைந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. இதன் மூலம் எனது இலட்சியக் கனவு நனவாகுமோ என்றெண்ணி சந்தோசமடைந்தேன்.

இங்கு என்னால இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்கள் பலருடன் நெருங்கிப்பாழகும் வாய்ப்புக் கிடைத்தது.அந்தவகையில வரதராணி அம்மாள், ராஜபுத்திரன் யோகராஜன் அண்ணா, முத்தையா ஜெகன்மோகன் அண்ணா, அஹமட் M நஸீர் அண்ணா, முருகேஸ் ரவீந்திரன் அண்ணா இப்பாடி கூறிட்டே போகலாம். இப்படியே சில நாட்கள் சென்று கொண்டிருக்கும் போது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் யோகராஜன் அண்ணா தயாரித்து வழங்கும் இளைஞர் மன்றம் நிகழ்ச்சில எனக்கும் கலந்து கொண்டு குரல் கொடுக்க சந்தர்ப்பமொன்றை பெற்றுத்தந்தார். இப்பொழுது இன்னும் சந்தோசமாக இருந்தது. எனது இலட்சியக்கனவு வெகு தொலைவில் இல்லை என்னை நெருங்கிவிட்டதென்று. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலே சென்று யோகராஜன் அண்ணா மற்றும் முருகேஸ் ரவீந்திரன் அண்ணா இவங்களோட சேர்ந்து நானும் எனது குரலப் பதிவு செய்துட்டு வந்தேன். அன்றைய தினமே மாலை 6.30 க்கு தேசிய சேவை அலைவரிசைல எனது குரலும் ஒலித்தது கேட்டேன். இவ்வாறு தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுத்தந்த யோகாராஜ அண்ணவுக்கு இப்பொழுதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.இப்படியாக இருக்கும் போது ஒருநாள் தனியார் வானொலி நிறுவனமான MAX வானொலியில குரல் தேர்வுல கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. பின்னர் ஒருவாரம் கழித்து என்னை பகுதி நேர அறிவிப்பாளராக சேர்ந்த்து கொள்ளும் படி சொன்னாங்க. முதலில் சில நாட்களுக்கு பயிற்சி அளித்துவிட்டுட்தான் நிகழ்ச்சில நேரடியா குரல் கொடுக்க சந்தர்ப்பம் தருவதாக சொன்னாங்க. எவ்வாறாயினும் நான் விடுவேனா?? நானா தேடிக்கிட்டு இருந்த சந்தர்ப்பம் இப்போ என்கிட்ட வந்துட்டு ஏன்விடனும். முதல் நாள் பயிற்சி பெறும் நோக்கத்தோட நானும் சென்றென். இரவு 8.00 மணில இருந்து 12.00 மணி வரைக்கும் இந்நிகழ்ச்சி மும்மொழிகளிலும் இடம்பெறும். தமிழில் நிகழ்ழ்ச்சிகள தொகுத்து வழங்குறதுக்குத்தான் நான் தெரிவு செய்யப்ப்பட்டேன். நான் நேர காலத்தோடே சென்று கலையகத்தில இருந்து எல்லாத்தயும் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீர்ன்னு தயாரிப்பாளர் வந்து என்னிடம் இதேபோன்று இந்நிகழ்ச்சிய செய்து காட்டுங்க அப்பிடீன்னு சொன்னதும் நானும் தயங்காம செய்து காட்டினேன். அதைக்கேட்டுட்டு, இப்பொழுதிலிருந்தே எனக்கும் சேர்ந்து நிகழ்ச்சியில குரல் கொடுங்கன்னு சொன்னாரு. இப்போ எப்படி இருக்கும். இந்த நிமிடம் நான் அடைந்த சந்தோசம் சொல்லி அளவிட முடியாது...நான் எதிபார்த்திருந்த நாள் வந்து விட்டதே என்று நெனக்கும் போது மனசுக்குள்ள எழுந்த சந்தோசம்...அப்பாடா என்னால அளவிட்டுக்கூற முடியல...என் வாழ்க்கைல நிறைய மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தாலும், இதுதான் நன் பெற்ற மிகப்பெரிய வெற்றி.அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு நாட்களும் வாரநாட்கள்ல இரவு 8.00 மணில இருந்து 12.00 மணி வரைக்கும் MAX அலைகளில என்னுடைய குரலும் சேர்த்து வலம் வந்து கொண்டிருந்தது. MAX வானொலியின் அன்பான நேயர்களுடன் கொஞ்சிப்பேசியது இன்னும் என்னால மறக்க முடியலங்க. என்றாலும் இது ஒரு சகோதர மொழி வானொலி என்பதால குறிப்பிட்ட வட்டத்த தாண்டி ஒருசில தமிழ்ப்பேசும் நேயர்கள் தவிர பெரும்பாலான தமிழ்பேசும் நேயர்களுடன் சரியான ஒரு நெருக்கத்தைப் பெறமுடியலயே என்றொரு கவலை இப்பவும் கூடவே இருக்குது.இப்போ நானும் ஒரு அறிவிப்பாளனாகிட்டேன். என் இலட்சியக்கனவு நனவாகிட்டு அப்பிடீன்னு இல்லாம இமைக்குற்றங்கள் கண்ணுக்குத்தெரியாதுன்னு சொல்வாங்க அதுபோல, இப்பவும் கூட என்கிட்ட நிறைய தவறுகள், பிழைகள் இருக்கலாம். அறிவிப்புத்துறைல இன்னும் நிறைய படிக்கனும். நான் தான் எல்லாம் தெரிந்தவன் அப்பிடீன்னு கூறமுடியாது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு என்பது போல, இன்னும் நிறைய கற்கனும்.என் திறமய இன்னும் நிறைய வளர்க்கனும்.நானும் நாளைய உலகில் ஒரு சிறந்த சமூக உணர்வுகொண்ட மனிதனாக விளங்கனும். இதுதான் எனது இலட்சியக்கனவு. இது நிறைவேறுமா??