Tuesday 25 January 2011

தமிழ்ப்பத்திரிகைத் துறையின் சமூகப்பொறுப்புணர்வு எங்கே செல்கின்றது!!!.....

ஒரு பகல் பொழுதில் எமது நாட்டிலிருந்து வெளிவரக்கூடிய பிரபலமான பத்திரிகை ஒன்றை படித்துக்கொண்டிருக்கும் போது, அப்பத்தைரிகை பல செய்திகளை சுமந்து வந்த அதேவேளை, பல எழுத்துப்பிழைகளையும் கூடவே கொண்டு வந்திருந்தததை காணமுடிந்தது. அதைப்படிக்கும் போது ஏதோ மனதுக்குள் சங்கடமாக இருந்தது. அதனால் இதைப்பற்றி கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைத்து இங்கு பதிவிடுகின்றேன்.

பொதுவாக ஊடகங்கள் பல நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இயங்கினாலும்,அந்த நோக்கங்களுக்குள் சமூகப்பொறுப்பு என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். இன்று பல ஊடகங்கள் சமூக நோக்கத்தை மறந்து செயற்படுகின்றன. குறிப்பாக அச்சு ஊடகத்தில் பத்திகைகளும் கட்டாயம் சமூக உணர்வு கொண்டு இயங்க வேண்டும்.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை தாய் போல காக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளுக்கும் இருக்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

இருந்தாலும் இன்று பல பத்திரிகைகள் முந்திக்கொண்டு செய்திகளை வழங்குவதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன. அவற்றில் விடும் தவறுகளை கருத்திற் கொள்வதில்லை. பல பத்திரிகைகளில் இன்று எழுத்துப்பிழைகளும், இலக்கணப்பிழைகளும் மலிவாக காணப்படுகின்றன.

குறிப்பாக மிகவும் பழைமையான பிரசித்தி பெற்ற பத்திரிகை நிறுவனமொன்றிலிருந்து அண்மைக்காலமாக வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகை ஒன்றில் இவ்வாறான பிழைகளை அடிக்கடி கண்டுகொண்டிருக்கின்றேன். எந்தளவுக்கென்றால் அப்பத்திரிகையின் ஒவ்வொரு பந்தியிலும் ஒரு பிழையேனும் காணலாம். அந்தளவுக்கு தாராளமாக காணமுடிகின்றது. இதை நான் ஏன் குறிப்பிட்டுக் கூறுகின்றேன் என்றால், இப்பத்திரிகை அண்மைக்காலமாக வெளிவந்துகொண்டிருந்தாலும், இப்பத்திரிகையானது இன்றைய இளம் சமூகத்தினர் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றுவிட்டது. அனைவரயும் கவரும் வகையில் பல வித்தியாசமான, இன்றைய சமூகத்துக்கு தேவையான பல தரப்பட்ட தகவல்களை சுமந்து வந்தாலும், இவ்வாறான பிழைகளை விடும்போது பத்திரிகை துறையின் சமூகப் பொறுப்பு எங்கே செல்கின்றது என்றொரு கேள்வி எம்மத்தியில் எழத்தான் செய்கின்றது.

பத்திரிகை எனும் போது குறிப்பிட்ட ஒருசாராரை மட்டும் நோக்காகக் கொண்டு வெளி வருவதில்லை. மாறாக அனைத்து தரப்பினரையும் தமது செய்திகள் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில், மற்ற பத்திரிகைகளோடு போட்டியிட்டுக்கொண்டு வெளிவருகின்றன. அதேபோல குறிப்பிட்ட செய்திகளுக்கென்று தனிப்பட்ட பக்கங்களை வடிவமைத்து, நல்ல பல தகவல்களை வழங்குவதானது வரவேற்கத்தக்கது. என்றாலும் அவ்வப்போது அப்பத்திரிகைகள் விடும் எழுத்துப்பிழகளாலும், இலக்கணப்பிழைகளாலும் அவர்களுடைய நோக்கமே திசைமாறக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக சிறுவர்களுக்கென்று வடிவமைக்கக்கூடிய பக்கங்களை எடுத்துக்கொண்டால், அதில் அவர்களுடைய அறிவை வளர்க்கும் நோக்கில் நல்ல பல தகவல்கள் இருந்தாலும், இவ்வாறான பிழைகளை அப்பத்திரிகைகள் தொடர்ந்து விடுவதனால்,அவர்களுடைய நோக்கம் எங்கே செல்கின்றது. உண்மையறியாத மாணவர்கள், பத்திரிகையில் இருப்பதால் இது சரியாகத்தான் இருக்கும், பாடசாலையில் ஆசிரியர்தான் ஏதோ தவறுதலாக கூறியிருப்பார் என்று அவர்களும் தவறான மொழிநடையைக்கடைபிடிக்க இந்த பத்திரிகைகள் காரணமாக அமைகின்றது என்று கூறுவதிலும் தவறில்லை. அந்ந்தளவுக்கு பல பிழைகள் நிறைந்ததாக இன்றைய பத்திரிகைகள் வெளிவருகின்றன.

1> இவ்வாறான எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் எற்படக்காரணம் என்ன?

2> பல மூத்த எழுத்தாளர்கள், ஆசிரியர்களின் மேற்பார்வையின் பின், அச்சிடப்படுகின்ற இந்தப் பத்திரிகைகளில் எவ்வாறு பிழைகள் ஏற்படுகின்றன?

3> அல்லது அவர்கள் மேற்பார்வை செய்யும் போது இவ்வாறான பிழைகளை அவர்களால் கண்டுகொள்ள முடிவதில்லையா?

4> அல்லது இவை வெறுமனே அச்சுப்பிழைகளா?

உண்மையில் இவ்வாறான பிழைகள் தவறுதலாக இடம்பெறலாம். என்றாலும் தொடர்ந்து பிழைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் போது உரிய ஆசிரியர்கள் இங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது இவ்வாறான பிழைகள் ஏற்படுவதினைத்தடுக்க முடியும்.

No comments:

Post a Comment

Thanks.. ur welcome