Monday, 11 July 2011

அரபு உலகில் தொடரும் மேற்குலகின் ஆக்கிரமிப்புகள்.

லிபியாவில் அதிபர் கடாபியை ஆட்சியிலிருந்து கவிழ்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் புரட்சி உள்நாட்டில் சற்று தீவிரமடைய அமெரிக்கா தலைமையில் பிரித்தானியா , பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் லிபியாவில் அமைதியை நிலைநாட்டுதல் என்ற போர்வையில் கடாபிக்கு எதிராக தாக்குதல்களை நடாத்த ஆரம்பித்துள்ளன. லிபியாவின் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா. சபையால் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்குலகின் நேசனாக இருந்து வந்த கடாபிக்கு எதிராகவே கடந்த 19.03.2011 அன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். பிரான்ஸ் முதலில் தாக்குதலை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து அமெரிக்கா பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளும் கடாபியின் விமான படைத்தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின.

லிபிய மீதான கூட்டுப் படைகளின் தாக்குதலுக்கு அனுமதி வழங்கி ஐ.நா.சபை சட்டமொன்றையும் பிறப்பித்துள்ளது. ஐ.நா.சபையின் முழுச் சக்தியும் அமெரிக்காவின் கையில் அடங்கியிருப்பதால் அவர்கள் நினைத்த பிரகாரம் சட்டத்தை இயக்க முடியும். அவ்வாறே அவர்களுக்கு சார்பாக சட்டத்தையும் பிறப்பித்து ஐ.நா.வின் சட்டத்துக்கு அடிபணிந்து, உடனடியாக லிபியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் மேற்குலகம் களம் இறங்கியுள்ளது.

இச்சட்டத்தில் லிபிய மக்களை பாதுகாப்பதற்காக ஏனைய நாடுகள் லிபியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றே கூறிள்ளன. லிபியா மீதான கூட்டுப்படைகளின் தாக்குதல் எதுவரைக்கும் என்று ஐ.நா. சபை பிறப்பித்த சட்டத்தில் வரையறுத்துக் கூறப்படவில்லை. இதுவே மேற்கத்தையவாதிகளின் தாக்குதலுக்கு இன்னும் சாதகமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு அரபு லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தாலும் சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அரபு நாடுகள் தமது ஆதரவை லிபியாவுக்கு எதிராக வழங்கிவருவதானது எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போன்றுள்ளது. எனினும் ரஷ்யா , சீனா, இந்தியா போன்ற நாடுகள் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றன.

இன்று வரைக்கும் கூட்டுப்படையினரின் தாக்குதலால் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 300க்கும் மேற்பட்ட ஏவுகனை தாக்குதல்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. லிபியாவில் பொது மக்களுக்கு எதிராக அரசு தரப்பு படையினர் மேற்கொள்ளும் தாக்குதலில் பலியானோரை கணக்கிட்டுக்கொண்டிருக்கும் ஐ.நா.சபைக்கு கூட்டுப்படையினரின் தாக்குதலால் பலியாவோரை சரியாகக் கணக்கிட்டுக்கூற முடியாதுள்ளது. உண்மையில் இங்கு கூட்டுப் படையினர் தாக்குதல்களை மேற்கொள்வதானது லிபியாவில் அமைதி காக்கும் நோக்கம் என்பதைவிட அவர்களின் பரந்த சுயநலமே காரணம் என்பது குறிப்பிடப்படவேண்டும்.

இதே போன்று வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தால் ஆண்டாண்டு காலமாக அரபுலகையும் முஸ்லிம்களையும் தமது காலனியாக வைத்திருப்பதற்கு எந்தளவு பாடுபட்டிருக்கின்றார்கள் என்பது புரியும். உலகிலேயே பெரும் சக்தியாக கடந்த 13 நூற்றாண்டு காலமாக துருக்கியில் திகழந்து வந்த இஸ்லாமிய கிலாபத் முறை மேற்கத்திய வாதிகளுக்கு பெரும் தலையிடியாக இருந்தது. எவ்வாறாயினும் இஸ்லாமிய கிலாபத்தை அடியோடு அழித்தொழிக்க திட்டம் தீட்டினார்கள். இதற்காக வேண்டி 1908 ஆம் ஆண்டு துருக்கி வாலிபர் ஒன்றியம் என்ற ஒரு இனவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது இஸ்லாத்தையும் சகோதரத்துவத்தையும் முக்கியத்துவப் படுத்தாமல் இந்த அமைப்பை உருவாக்கிய மேற்கத்தையவாதிகளுக்கு விசுவாசமாக தேசிய வாதத்தை முக்கியத்துவபடுத்தி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து பிளவுப்படுத்த ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக துருக்கியின் அப்போதைய கலீபா 2ம் அப்துல் ஹமீத் மற்றும் 240 உறுப்பினர்களைக் கொண்ட அவரது அமைச்சரவையும் 27 ஏப்ரல் 1909 ஆம் அண்டு அன்று ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டது. கலீபா அப்துல் ஹமீத் அவருடைய நிருவாக முறைமை இவர்களுக்கு பெரும் சவாலாக காணப்பட்டதுவே இதற்கு காரணம். கலீபா 2ம் அப்துல் ஹமீத் அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் மேற்கத்தியவாதிகளினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டப்படி துருக்கியில் முஸ்தபா கமால் அதாத்தூர்க் என்ற இஸ்லாத்தின் எதிரியை பயன்படுத்தி 03.03.1924 ஆம் ஆண்டு இஸ்லாமிய கிலாபத் முற்றாக இல்லாதொழித்தார்.

அன்று துருக்கியில் இஸ்லாமிய கிலாபத்தை ஒழிப்பதற்காக கையாண்ட அதே வழிமுறையைதான் இன்று வேறுபட்ட பல நோக்கங்களுக்காக வேறுவிதமாக மக்கள் புரட்சி என்ற பெயரில் அரபு நாடுகளில் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் இந்த மேற்கத்திய வாதிகள். 2002 ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் அமைதி காக்க அதிபர் சதாமுக்கு எதிராக படையெடுத்த அமெரிக்க இன்று லிபியாவில் அமைதிய காக்க படையெடுத்துள்ளது.

ஏகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கும் லிபியாவில் இடம் பெறுகின்ற மக்கள் புரட்சிக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. உண்மையில் லிபியாவில் இடம் பெறும் மக்கள் புரட்சியின் பின்னணியில் மேற்குலகம் செயற்படுகின்றது என்பதானது தெளிவான உண்மை. இங்கு கிளர்ச்சியாளர்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச தரப்பு படையினரை தாக்கும் அளவுக்கு இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது யார்? என்ற கேள்வி இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

உள்நாட்டு பிரச்சினைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்னர் அமைதி காக்கும் பெயரில் அந்நாட்டின் மீது படையெடுப்பதும் மேற்குலகுக்கு கைவந்த கலையென்றே கூறவேணடும். எண்ணெய் வளம் தங்கம் என்று இயற்கை வளங்களுடன் காணப்படுகின்ற அரபு நாடுகளிலே பிளவுகளைத் தூண்டி விட்டு அமைதி காக்கும் நோக்கில் பொது நலம் கொண்டவர்களாக செயற்படுகின்றார்கள்.

மேற்குலகம் எப்பொழுதுமே பொதுநலம் என்ற போர்வைக்குள் சுயநலம் கொண்டதாகவே செயற்படுகின்றது. தேசிய மற்றும் பிராந்திய அளவில் தங்களது நலன்களையும் , ஆதிக்கத்தையும் பலப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்து வந்துள்ளது. தற்போது லிபியாவின் விடயத்திலும் கூட அதிபர் கடாபியை கொலை செய்வது தமது நோக்கமல்ல அமைதியை நிலைநாட்டுவதே தமது நோக்கம் என்று வெளிப்படையாக கூறினாலும் உள்ளார்ந்தமாக பல எதிர்பார்ப்புக்களே இவர்களது தாக்குதலுக்கு காரணம் என்று கூறலாம்.

இது இவ்வாறு இருக்க லிபியாவில் மக்கள் போராட்டம் நடக்கும் கிழக்கு பிரதேசத்தில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அதற்கு பிரதமராக மேற்குலகுக்கு நெருங்கிய நண்பரான மஹ்மூத் ஜிப்ரி என்பவரை நியமித்துள்ளனர். இங்கு லிபியாவை கிழக்கு லிபியா மேற்கு லிபியா என்று இரண்டாக பிரித்து நாட்டை பிளவுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கின்னறது.

லிபிய தலைவர் கடாபியின் ஆட்சி சரியா ? பிழையா? என்று சிந்திப்பதை விட எமது நாட்டையும் எமது எண்ணெய் வளத்தையும் மேற்குலகுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது பற்றி சிந்திக்கும் தருணத்தை லிபிய மக்கள் எட்டியிருக்கிறார்கள். எது எவ்வாறாயினும் மேற்குலகின் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் திட்டமிட்டப்படியே படிப்படியாக வெற்றிப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

1980 ஆம் ஆண்டுகளில் ஈராக்கிற்கும் ஈரானுக்கும் ஆயுதங்களை வழங்கி இரு நாடுகளையும் மோதவிட்டு மேற்குலகம் வேடிக்கை பார்த்ததை இன்றும் யாரும் மறக்கவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பலஸ்தீன் போன்ற நாடுகளில் முஸ்லிம்களை அழித்தொழிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மேற்குலகம் இன்று லிபியாவில் மனிதாபிமான தாக்குதல் நடத்துவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

லிபிய தலைவர் கடாபி ஆரம்பத்தில் மேற்கு நாடுகளுடன் எதிரியாக செயற்பட்டிருந்தாலும் 2004 ஆம் ஆண்டின் பின்னர் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார். பராக் ஒபாமா மற்ற நாட்டுத் தலைவர்களைவிட வித்தியாசமானவர் என்றும் தனது நெருங்கிய நண்பர் என்றும் கடந்த ஆண்டு லிபிய தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது கடாபி தெரிவித்திருந்தார்.

லிபியா ஆபிரிக்காவிலே அதிகூடிய எண்ணெய் வளம் கொண்ட நாடு. லி்பியாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா பிரித்தானிய உட்பட பல மேற்கத்திய நாடுகள் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே அடக்கி வருகின்றன.

2007 ஆம் அண்டு பிரித்தானியா 900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெய் அகழ்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. அது மட்டுமன்றி இரு நாடுகளுக்குமிடையில் ஆண்டு தோறும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொடுக்கல் வாங்கல்களும் இடம் பெற்று வருகின்றன. எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நாடுகளின் பல முக்கிய கம்பனிகள் லிபியாவையே வியாபாரத் தளமாக பயன்படுத்துகின்றன. கடந்த சில அண்டுகளாக இந்தளவுக்கு நெருக்கமாக லிபிய தலைவர் கடாபி மேற்குலகுடன் தனது உறவைப் பேணி வந்துள்ளார்.

மேற்குலகுடன் நல்ல நட்பைப் பேணி வந்த லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்க முற்பட்டுள்ளபோது ஈராக் லிபியா போன்றே எண்ணெய் வளம் கொண்ட நாடுகளான சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவுடனான நட்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியுமா? ஏன்பதை அந்நாட்டுத் தலைவர்கள் சிந்திக்க மறந்து விடக்கூடாது.

கடந்த 2011 ஏப்ரல் 07ம் திகதி வெளிவந்த விடிவெள்ளி பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரை