Sunday 25 June 2017

தலைப்பிறைக்காக பிரிவினை வேண்டாம்


நேற்றைய தினம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஏகோபித்த தீர்மானத்தின்படி இலங்கையில் எங்கும் பிறை தென்படாததன் காரணமாக ரமழானை முப்பதாக பூர்த்தி செய்து நாளை திங்கட்கிழமை (26/06/2017) பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் ஏனைய பல நாடுகளில் பிறை தென்பட்டதால் இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதன்படி இலங்கையிலும் சர்வதேசப் பிறையினை அடிப்படையாகக் கொண்டு சிலர் இன்று பெருநாள் கொண்டாடுகிறார்கள். இவர்கள் ஜம்மியதுல் உலமாவின் முடிவுக்கு மாறாகவே இந்த பெருநாளை
கொண்டாடுகின்றார்கள். எம் சமூகத்திடையே நாளாந்தம் பிரிவினைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்தப் பிரிவினை எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

உண்மையில் அகில ஜம்மியதுல் உலாமாவின் எந்தவொரு செயற்பாடுகளும் முஸ்லிம் சமூகம் திருப்திப்படும் அல்லது முஸ்லிம் சமூகத்துக்கு பொருத்தமானதாக இல்லை என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. நான் அடிக்கடி கூறுவது போல அங்கு இருப்பவர்களில் பெரும்பாலானோர் அறபு மொழியை படித்தவர்களே தவிர அங்கு மிகவும் இஸ்லாமிய உலமாக்கள் குறைவானவர்களே இருக்கின்றார்கள்.

அறபு மொழியில் உலமா என்றால் துறைசார்ந்த நிபுணர்கள் என்பது அர்த்தம். அங்கு உள்ளவர்கள் அறபு மொழியில் உலமாக்களாக இருக்கலாமே தவிர இஸ்லாமிய மார்க்க விடயத்தில் உலமாக்கள் (துறைசார்ந்த நிபுணர்கள்) குறைவானவர்களே இருக்கன்றார்கள். அதன்படி அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களுடைய நடவடிக்கைகள் எதுவும் முஸ்லிம் சமூகத்துக்கு பொருத்தமானதாக இல்லை.

என்றாலும் ஜம்மியதுல் உலமாவையோ அல்லது அங்கிருக்கும் அறபு படித்தவர்களையோ (மௌலவிமார்களை) மாத்திரம் முழுமையாக நாம் குறை கூறிக் கொண்டு இருக்க முடியாது. இதற்கு இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதே எனது கருத்து.

இன்று சமூகத்தில் உள்ள பெரும்பாலான மௌலவிமார்கள் 07ம் ஆண்டு அல்லது 08ம் ஆண்டு வரை படித்தவர்களே. அதேபோன்று அறபு மத்ரசாக்களில் சேர்த்துக் கொள்வதற்காக, 07ம் ஆண்டு அல்லது 08ம் ஆண்டு சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதே அதிகூடிய தகைமையாக கேட்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பாடசாலைகளில் ஒழுங்காக கல்வி கற்காத பிள்ளைகளை அல்லது பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளையே மத்ராசாக்களுக்கு சேர்க்கும் வழக்கம் எமது சமூகத்தில் உள்ளது. நன்றாக படிக்கும், திறமையான பிள்ளைகளாக இருந்தால் டாக்டராகவோ, இஞ்சினியராகவோ படிக்க வைக்க முற்படும் நாம், அவர்களை சிறந்த இஸ்லாமிய உலமாக்களாக சமூகத்தில் உருவாக்குவதற்கு விரும்புவதில்லை.

இவ்வாறான ஒரு நிலையில் நாம் எவ்வாறு இஸ்லாமிய துறைசாரந்த நிபுணர்களை (சிறந்த உலமாக்களை) எதிர்பார்க்க முடியும். இதுபோன்ற மௌலவிமார்களை நாமே உருவாக்கி விட்டு அவர்கள் மீதே முழுமையான குற்றத்தை சுமத்துவதும் நாம் செய்யும் மற்றொரு தவறு.

அதேபோன்று இன்று எமது சமூகம் திடலிலா, பள்ளியிலா? ஓதலாமா ஓதக் கூடாதா? வேற்றுமையில் ஒற்றுமை என்று பல வீண் வாதங்களில் பிசியாக இருக்கின்றார்களே தவிர தீர்வுகளை நோக்கி சிந்திக்கவில்லை. இன்னும் ஒரு தரப்பு மாதம் தவறாமல் மூன்று நாட்கள் சென்றுவிட்டு வந்தால் தமது கடமைகள் நிறைவேறி விட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் சில படித்தவர்களும் கூட.

இதுபோன்ற வீண் வாதங்கள், பிரிவினைகள்  வேண்டாம், ஒற்றுமையே வேண்டும் என்று கூறினால், அது பித்அத், அதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது, உண்மையை எத்திவைக்க வேண்டும் என்று இன்னொரு தலைப்பிலே வாதத்தை ஆரம்பிக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, இனவாதிகளினால் திட்டமிட்டு தாக்கப்பட்டுக் கொண்டும், ஒடுக்கப்பட்டுக் கொண்டும் தவித்துக் கொண்டிருக்கின்றது இன்று நமது  சமூகம். ஆனால் தமது கொள்கைகைள விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலையில் நாம் இருக்கின்றோம்.

எந்தவொரு உண்மையான முஸ்லிம்களும் சுவர்க்கத்தை நோக்கியே நல்லமல்களை செய்கின்றார்கள். எந்தவொருவரும் இயல்பாகவே மார்க்கத்திற்கு முரணான எந்தவொரு செயலையும் செய்வதற்கு முற்பட மாட்டார்கள். நாம் இது தான் சரி என்று நினைப்பதை மற்றொரு சாரார் தவறென்று நினைக்கிறார்கள். நாம் தவறென்று நினைப்பதை மற்றறொரு சாரார் சரியென்று நினைக்கின்றார்கள். இதில் ஒருவேளை இரு சாராருமே சரியாக இருக்கலாம் அல்லது இரு சாராருமே தவறாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு உண்மையான முஸ்லிமும் வேண்டுமென்று நரகம் செல்ல வேண்டும் என்று பித்அத்களை செய்யமாட்டார்கள். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

நன்றாக நினைவிருக்கட்டும், நாம் கூறுவது தான் சரி, அவர்கள் கூறுவது பித்அத், அவற்றை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது, உண்மையை எத்தி வைக்க வேண்டும் என்று கூறி தமது கொள்கை சார்ந்த எண்ணங்களையும், கருத்துக்களையும் மற்ற முஸ்லிம்கள் மீது திணிக்க முற்படுவதன் மூலம், உண்மையை நமக்குள் எத்தி வைக்கிறோமோ இல்லையோ, மறுபக்கம் இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாத மாற்று மத சகோதரர்களுக்கு பாரிய தவறான தகவலொன்றை வழங்கிக் கொண்டே இருக்கின்றோம். நமது இந்த செயற்பாடுகள் மூலம் இஸ்லாம் பற்றிய தவறான சிந்தனைகளை அவர்களுக்கு எத்தி வைத்துக் கொண்டே இருக்கின்றோம். அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டே இருக்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்து விட வேண்டாம்.

அதன்படி முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் அறிந்தோ அறியாமலோ பங்காளிகள் தான். ஆகவே வீணான வாதப் பிரதிவாதங்களை விட்டு நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். ஜம்மியதுல் உலமாவின் தீர்மானங்கள் பிழையாக இருந்தால் அதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பாளர்கலல்ல. நாமும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா என்ற அமைப்பின் கீழ் ஒன்றுபட்டிருப்பதே எமது சமூகத்துக்கு சிறந்தது. அந்த அமைப்பு நமது சமூகத்துக்கு முக்கியமான ஒன்று. ஆகவே அந்த அமைப்பில் உள்ளவர்களும் அங்கு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்த அமைப்பை இஸ்லாமிய புத்திஜீவிகளும், சிறந்த உலமாக்களும் உள்ள அமைப்பாக கட்டியெழுப்ப வேண்டும். நாமும் அதற்கு பங்காளிகளாக இருக்க வேண்டும்.

ஏ.ஏ.எம். பஸ்லி
ஊடகவியலாளர் - அத தெரண

No comments:

Post a Comment

Thanks.. ur welcome